Tuesday, 17 December 2019

வானத்து மேகமே! என்னுடைய வணக்கத்தை ‘அவனிடம்’ சொல்!

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

மார்கழி 2

                                                





                                                           திருவெம்பாவை

பாடல்  2

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய்,இராப் பகல் நாம் 
பேசும்போது எப்போது இப் போது ஆர் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ? நேரிழையாய் நேரிழையீர்
சீ!சீ1 இவையும் சிலவோ? விளையாடி
ஏசும் இடம் ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப் பாதம் தந்தருள வந்தருளும் 
தேசன்,சிவலோகன்,தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பு ஆர்? யாம் ஆர்? ஏல் ஓர் எம்பாவாய்.

பொருள்:

சிறந்த அணிகளை அணிந்தவளே
இரவும் பகலும்
நாம் பேசும் பொழுது எப்பொழுதும்
என் அன்பு
மேலான ஒளிப்பிழம்பான இறைவனுக்கு என்று கூறுவாய்.
இப்பொழுது
அருமையாகிய படுக்கைக்கே அன்பு வைத்தனையோ?
(என்று எழுப்பியவள் கூற 
எழுப்பப்பட்டவள் கூறுவாள்)
பெண்களே
சீச்சீ, நீங்கள் பேசும் நகைமொழிகளில் இவையும் சிலவாகுமோ?
என்னோடு விளையாடி
பழித்தற்குரிய சமயம் இதுதானோ?
(என்று எழுப்பப்பட்டவர் கூறிய பின்
எழுப்பியவர் கூறுவார்)
தேவர்கள் வழிபடுவதற்கு நாணுகின்ற 
தாமரை மலர் போன்ற திருவடியை
அன்பருக்குக் கொடுத்தருள
எழுந்தருளின
ஒளி உருவனும்
சிவபுரத்தவனும்
தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு
அன்பு பொருந்திய நாம் உனக்கு யார்? (அயலார் அல்லவே)

விளக்கம்:

இப்பாடல் உரையாடலாயுள்ளது.  பஞ்சணை மேல் நேசம் வைத்தனையோ என்ற கூற்று நகைமொழியாம்.  விண்ணோர்கள் பயன் கருதி வழிபடுபவர்களாதலின்,இறைவன் திருவடியைப் புகழும் பொழுது நாணத்துடன் புகழ்வார்கள் என்பதற்கு, ‘விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்பாதம்’ என்றார்.  இதனை,

“வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான்;மனம்நின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மைஎல்லாம் தொழவேண்டி”

என அடிகள் முன்பு அருளிச் செய்ததனால் அறிக.  இறைவனிடம் அன்பு பொருந்திய நாம் நமக்குள் அயலார் அல்லவே? ஆதலால்,எள்ளி நகையாட மாட்டோம் என்பார்.   ’அன்பார் யாம் ஆர்?’ என்று கூறினார்.
இதனால்,நல்லோர் இறைவனிடமே அன்பு செலுத்துவர் என்பது கூறப்பட்டது.


No comments:

Post a Comment

வானத்து மேகமே! என்னுடைய வணக்கத்தை ‘அவனிடம்’ சொல்! தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி மார்கழி 2                ...